திருநெல்வேலி அருகில் உள்ள கடையனோடை என்னும் கிராமத்தில் வில்லி முத்துக் கோனார்-நாராயணவடிவு தம்பதியருக்கு 23.11.1908 ஆம் ஆண்டு பிறந்தவர் மகான் சுப்பையா சுவாமிகள். ஒரே ஆண் வாரிசான இவர், படிப்பில் அதிக ஆர்வம் கொண்டவராகவும், அதே நேரத்தில் ஆன்மீக நாட்ட முடையவராகவும் இருந்தார். அப்போது இருந்தே நண்பர்களுடன் சேர்ந்து பல கோயில்கள், சமாதிகளை சுற்றி வருவார்.
ஐந்தாம் வகுப்பு வரை கடையனோடையில் படித்த இவர், கோயில்,சமாதி என்று சுற்றி திரிந்ததால் அவரது பெற்றோர், மூத்த மகள் இருக்கும் குலசேகரபட்டினத்திற்கு அனுப்பி வைத்தனர். அங்குள்ள பெரிய பள்ளியில் சேர்ந்தார். ஆனால் அங்கு சுப்பையா சுவாமிக்கு நண்பர்கள் யாரும் கிடைக்கவில்லை. வார விடுமுறை நாட்களில் அருகில் உள்ள திருச்செந்தூர் சென்று அங்குள்ள வள்ளிக்குகை, மூவர் சமாதி போன்ற இடங்ளில் தனிமையில் அமர்ந்து கொள்வார். அப்போது அங்கு வரும் சாதுக்களுடன் சித்த வைத்தியம், யோகம் போன்றவற்றை கற்றுக் கொண்டார். பின்னர் மூலிகை மருந்துகள் தயாரித்து பலருக்கு சிகிச்சை செய்தார். 7ஆம் வகுப்பு வரை குலசேகரபட்டினத்தில் படித்த அவர், மீண்டும் கடையனோடைக்கு பெற்றோர்கள் அழைத்து சென்றனர். பின்னர் ஆழ்வார் திருநகரிலுள்ள இந்து நடுநிலைப்பள்ளியில் 8ஆம் வகுப்பும், திருவைகுண்டம் காரனேஷன் உயர் நிலைப்பள்ளியில் 10ஆம் வகுப்பும், பாளையங்கோட்டை தூய யோவான் கல்லூரியில் படித்தார். இதையடுத்து மதுரைக்கு சென்று பி.ஏ(hons) படித்து முடித்தார்.
கல்லூரி பேராசிரியராக இருந்த கல்யாணம் ராமசாமி என்வபவருடன் தங்கி சித்துகளிலும், மருத்துவத்திலும், ஆராய்ச்சியிலும் பயிற்சி பெற்றார். மேலும் மூலிகை, வைத்தியம், உடற்மகூறு, சித்துகள், உறங்காமை, உண்ணாமை போன்ற பயிற்சி பெற்றார். ஆனால் அதில் நாட்டமில்லை. தன் நிலங்களை விற்று ஏழைகளுக்கு அன்னதானம் வழங்கினார். பின்னர் கணபதிமூலமந்திரம், ஸ்ரீராம ஜெயம் போன்ற மந்திரங்களை பலருக்கு உபதேசித்தார். மீண்டும் குற்றாலம், வள்ளிக் குகை, திருச்செந்தூர் சென்றார். அதுவும் சரிப்படவில்லை. பின்னர் திருப்பதி சென்றார். பிறகு விருத்தாசலம் சென்றார். அங்கிருந்து வடலூரை அடைந்தார். அங்கு சில மாதங்கள் தங்கினார். பின்னர் அங்கிருந்து திருக்கழுக்குன்றம் வந்தடைந்தார். சுப்பையா சுவாமிகள் கடைசியாகப் பேசியது திருக்கழுக் குன்ற மலையிலமர்ந்த ஓராண்டு வரைதான் (1951)
1951ஆம் ஆண்டு அங்கு வந்த சுப்பையா சுவாமிகள், அங்குள்ள மலையின் மீது அமர்ந்து யோக பயிற்சி செய்வார். அவ்வப்போது அவருக்கு பால், பழம் கொடுத்து உபசரித்தனர். இரவில் விஷ ஜந்துக்கள், புலி, சிறுத்தை எல்லாம் நடமாடும் இந்த இடத்தில் எப்படி இருக்கிறீர்கள் என்று கேட்டுள்ளனர். சுவாமி புன்முறுவலுடன் இரண்டொரு வார்த்ததை கூறி அவர்களை அனுப்பி வைத்தார். பின்னர் மரணத்திற்கு மூலங்களை நசிக்கும் உபாயத்துடன் தவம் மேற்கொண்டதால் பேசுவதை நிறுத்திக் கொண்டார். தனக்கு முன்பாக திருவருட்பா என்ற நூலை மட்டும் எப்போதும் வைத்திருப்பார். பின்னர் அங்குள்ள மக்களால் கடையனோடை சுவாமி என்றும், பி.ஏ. சுவாமி என்றும், திருக்கழுக்குன்றம் சுவாமி என்றும் அழைக்கப்பட்டார்
சுப்பையா சுவாமிகள் கடையனோடையில் அவதாரம் செய்தது முதல் திருக்கழுக்குன்றத்தில் முக்தியடைந்தது வரை அவருக்கு இவ்வுலக உயிர்கள்,சடமாயிருந்த கோயில்கள், சமாதிகள் முதலியவற்றுடன் நிறையத் தொடர்புகள் உண்டு. எவ்வுயிருக்கும் தீங்கு நினைக்காதவனே வைஷ்ணவன் என்பர். அவ்வழி வந்தவர் எவ்வுயிருக்கும் எவராலும் தீங்கு வரக்கூடாது என எண்ணுபவன் சன்மார்க்கி என வைஷ்ணவத்தில் இருந்து சம்மார்க்கம் வரை அவர் வந்த பாதையை பார்க்கும் போது அவரின் உயிர் எத்கதகைய உறவை ஒவ்வொன்றிலும் நிலை நாட்டியிருக்கிறது .
1961 ம் ஆண்டு அவர் தன்னுடன் தொடர்புடைய அன்பர்களிடம் தனது உடலில் நாடி அடங்கும் நேரத்தை குறிப்பிட்டு இருந்தார். அப்போது அவர் திருக்கழுக்குன்றம் மலை குகையில் இருந்தார். நாடி அடங்கியவுடன் அவரது உடல் கீழே கொண்டுவரப்பட்டது. அவர் விருப்பப்படி சமாதி கட்டப்பட்டு அமர்ந்த நிலையில் வைக்கப்பட்டது. மேலெ திறக்கும் வகையில் பலகைக் கல் வைத்து மூடப்பட்டது. 40 நாட்களுக்கு பூஜை செய்யப் பட்டது. பின்னர் அரசு அதிகாரிகள் மருத்துவர்கள் முன்னிலையில் சமாதியின் மூடி திறக்கப் பட்டது. அவரது உடல் கெடாமல் அமர்ந்த நிலையில் அப்படியே இருக்கக் கண்டனர் மக்கள் அனைவருக்கும் ஆச்சரியம். THE BODY IS INTACT என்று அரசுக்கு அறிக்கை அனுப்பப் பட்டது. சமாதியின் மேல் மூடி மூடப்பட்டது. மீண்டும் பத்து மாதங்களுக்கு பூசை செய்யப்பட்டது.அதன் பிறகு மீண்டும் சமாதியின் மூடி திறக்கப் பட்டது. உடல் கெடவில்லை. பின்னர் சமாதியின்மீது கட்டிடம் கட்டப் பட்டுள்ளது.